
இந்தூர்-ஜபல்பூர் இடையே செல்லும் ரயிலில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவர் கழுத்து, கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளில் கூரிய ஆயுதத்தால் காயமடைந்த நிலையில் மயக்கத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுப் பயணிகள் பிரிவில் அசைவில்லாமல் கிடந்த சிறுமியை பார்த்த ஒரு பயணி உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின்பேரில், ரயில் சுஜல்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை பொறுப்பாளரான டாக்டர் சர்தா ரம்ஸராயா கூறியதாவது, “சிறுமியின் உடலில் கூரிய ஆயுதம் அல்லது பிளேடு போன்றவற்றால் தாக்கப்பட்ட அறிகுறிகள் உள்ளன. அவ்வப்போது அவளது உணர்வு திரும்பும்போது ‘என்னை காப்பாத்துங்கள்’ என கதறுகிறார். பலம் குறைந்த நிலையில் இருப்பினும், மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தற்போது சிறுமி ஐ.சி.யூ-வில் கண்காணிப்பில் வைத்துள்ளார்” என்றார்.
சம்பவம் தொடர்பாக விசாரணையில், சிறுமி ஜபால்பூர் நகரைச் சேர்ந்த பூனம் பாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 23ஆம் தேதி அவரது குடும்பத்தினர் சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். போலீசார் தற்போது அவரது பெற்றோர்களை தொடர்பு கொண்டு, சுஜல்பூருக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமி முழுமையாக உணர்வுக்கு வரும்போது, நீதிமன்ற விதிப்படி முதல்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மர்மமான குற்றச்செயல் என சந்தேகிக்கப்பட்டு, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்வு மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் காயங்கள், மனஅழுத்தம் மற்றும் மயக்கநிலை ஆகியவற்றின் பின்னணியில், துல்லியமான தகவல்களை பெற்று குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.