சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பெரியார் நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் இரண்டாவது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த ரவுடி ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். அதற்கு அருண்குமார் பணம் கொடுத்துவிட்டு பிரியாணி பார்சல் வாங்கி செல்லுமாறு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அந்த வாலிபர் பிரியாணி பாத்திரத்தை எட்டி உதைத்து கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து ரகளை செய்தார்.
இதனால் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் போதையில் ரகளை செய்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த கோடம்பாக்கம் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ரகளை செய்தவர் ரவுடியான கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.