
உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலீலாபாத் கோட்வாலி பகுதியில் உள்ள முஷாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் அந்தரங்க உறுப்புகளை பிளேடு மூலம் தாக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
அதாவது 19 வயதான விகாஸ் நிஷாத் என்ற இளைஞர், முஷாரா கிராமத்தைச் சேர்ந்த தனது காதலியுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார். திங்கட்கிழமை இரவு, அந்த காதலி அவனை வீட்டிற்கு வர அழைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஆறு மணி நேரம் அங்கு ஒன்றாக இருந்த நிலையில், இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த பெண் பிளேடு போன்ற கூரிய ஆயுதத்தால் விகாஸின் அந்தரங்க பகுதிகளை வெட்டியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, விகாஸ் மோசமான ரத்தப்போக்குடன், தன் வீட்டை எப்படியோ சென்றடைந்தார். அங்கு அவர் தனியாக ஐந்து மணி நேரம் வரை ரத்தத்தை நிறுத்த முயன்றும் முடியாமல் தவித்துள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை உணர்ந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விகாஸ், அதே நேரத்தில் ரத்தமாற்றம் செய்யப்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விகாஸின் தாய் கூறியதாவது, “அந்த பெண் என் மகனை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அழைத்து வந்துள்ளார். திங்கட்கிழமை இரவு சந்திப்புப் பெயரில் வீட்டிற்கு அழைத்து சென்று, காலையில் அவனது அந்தரங்கங்களை பிளேடு கொண்டு வெட்டியுள்ளார். என் மகனது உயிரே போயிருக்க வாய்ப்பு இருந்தது” என வேதனையுடன் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கலீலாபாத் கோட்வாலி காவல் நிலையம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. புகார் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட பெண்ணை எதிர்த்து வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காதலிலும் நம்பிக்கைக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் எவ்வளவு கடுமையான முடிவுகளுக்கு வழிவைக்கக்கூடும் என்பதை வெளிச்சம் போடுகிறது. மேலும், இது போன்ற சம்பவங்களுக்கு சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது மிக அவசியமாகியுள்ளது.