கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு மாதத்தில் ஹசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தை அரசு மிக தீவிரமாக எடுத்துக்கொண்டு ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த குழுவினருக்கு கடந்த மாதமே இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசிக்கும் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று மக்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி கூட மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சித்தராமையா கூறியுள்ள நிலையில் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.