
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன் (26) தள்ளு வண்டியில் காளான் விற்பனை செய்து வருகின்றார். இவரும் சேது மணிகண்டனும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த நிலையில் சேது மணிகண்டனும் அவருடைய அவருடைய வீட்டிற்கு அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திடீரென்று அந்தப் பெண் சேது மணிகண்டனை விட்டுவிட்டு குகநாதனை காதலித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பிறந்தநாளை முன்னிட்டு சேது மணிகண்டன் தன்னுடைய செல்போனில் அவருடைய புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்தியுள்ளார். அதனைப் போலவே குகநாதனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த சேது மணிகண்டன் செல்போனில் அவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு இரவு நேரத்தில் பவானி அரசு மருத்துவமனை அருகே சேது மணிகண்டன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குகநாதன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் குகநாதன் திடீரென தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேது மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.