தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சர்க்கரை தாஸ் (48) என்பவர் ஹெட் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7-ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாயார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை வெளியிட்ட பெண் போலீஸ் ஆவார். இதனையடுத்து பாலியல் புகார் தொடர்பாக சைல்டு லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு மாணவிகள் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி என்பவர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சர்க்கரை தாசை கைது செய்தனர்.