சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண் பூனைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா கடிதத்தை லேப்டாப்பில் டைப் செய்துள்ளார். அதன் பிறகு மனம் மாறி அந்த கடிதத்தை அனுப்பாமல் வைத்தார்.

ஆனால் திடீரென அந்த இளம்பெண் வளர்க்கும் பூனை மடிக்கணினி அருகே சென்று என்டர் பட்டனை அழுத்தியது. இதனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ராஜினாமா கடிதம் சென்றது. அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இளம்பெண்ணை பணியில் சேர்க்க முடியாது என கூறிவிட்டார். அந்த பெண் புதிதாக வேலை தேடி வருவதாக தெரிகிறது.