டெல்லி சாகர்பூரில் மூன்றாவது மாடியில் இருந்து 3 வயது சிறுமி விழுந்து பலி: கண்கலங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி  மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து  மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

முழு சம்பவமும் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் குழந்தை திடீரென கீழே தெருவில் விழுவது தெரிகிறது.

அதன் பிறகு, அங்கு ரத்தத்தில் மூழ்கிய நிலையில் கிடக்கும் குழந்தையைக் கண்டு பதறும் ஒரு பெண்மணி அலறல் எழுப்புவது போல் தெரிகிறது. சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதை காணலாம். அப்போது குழந்தையின் நெஞ்சில் அடித்து கொண்டு  கதறி அழுகிறார்.

சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முடியவில்லை, சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.

சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சூழ்நிலைகளை கண்டறிய போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமி தனியாக மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சம்பவம் குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோன்ற சம்பவம் கடந்த டிசம்பரில் நொய்டாவில் நடந்தது, மூன்று வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது தனது கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

டெல்லியின் ஜஃபராபாத் பகுதியில் மற்றொரு சம்பவத்தில், வீட்டில் ஜன்னல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிரிழந்தது. அவன் சமநிலையை இழந்து விழுந்தான், அவனைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும், அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவனை இறந்து விட்டதாக அறிவித்தனர்.