மும்பையின் குர்லா பகுதியில் சித்திக் என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சித்திக் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பிறகு நான்கு வயது மகளை தாக்கி தரையில் தள்ளி விட்டார். இதனால் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்திக்கின் மனைவி தனது மகளை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்திக்கை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.