
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்பவர் பெண் காவலராக வேலை பார்க்கிறார். தற்போது விமலா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று காலை 9:30 மணிக்கு கொளத்தூர் பள்ளத்து பட்டிலில் இருந்து விமலா வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார் விமலா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விமலாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விமலாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம். அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் விமலாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.