
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்-பூஞ்சோலை(36) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சிதா(17) என்ற மகளும், ராஜீவ்(9) என்ற மகனும் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு பூஞ்சோலை தனது இருசக்கர வாகனத்தில் மகள், மகனுடன் பொன்னமராவதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கேசராபட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் முன்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூஞ்சோலை இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்க முயன்றார்.
அப்போது பூஞ்சோலையும் அவரது மகளும் கீழே விழுந்தனர். ஆனால் மகன் மட்டும் வண்டியின் முன்புறம் அமர்ந்திருந்ததால் அவனை காப்பாற்றுவதற்குள் தீ மளமளவென எரிந்து சிறுவனின் மீது பரவியது. இதனால் சிறுவன் படுகாயம் அடைந்தான். உடனே பூஞ்சோலை தனது மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.