சென்னை வானகரம் பகுதியில், முன்னாள் காதலியை வீடியோவை கொண்டு மிரட்டி, பணம் மற்றும் ஐபோன் கேட்ட காதலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானகரத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, மாங்காடு பகுதியை சேர்ந்த அகமது மாஹீர் (21) என்பவருடன் பழகி காதலித்து வந்தார். சில காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இடையிலான உறவு முறிந்துவிட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் மாஹீர், “முன்பு நாம் பழகியபோது எடுத்த வீடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. ரூ.1 லட்சம் பணமும், ஆப்பிள் ஐபோனும் கொடுக்காவிட்டால், இந்த வீடியோக்களை உன் உறவினர்களிடம் அனுப்பிவிடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்த அந்த பெண், வானகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழக பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாஹீர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஹீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.