சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்தியாவைச் சேர்ந்த சஞ்ஜோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், உலகளவில் மிகப்பெரிய விளையாட்டு நிர்வாக பதவிக்கு இந்தியா செய்துள்ள புதிய வரவேற்பாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இப்பதவியில் இருந்த ஆஸ்திரேலியர் ஜெப் அலார்டிஸ், சில மாதங்களுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவருடைய இடத்தை நிரப்பவே, தற்போதைய ஜியோஸ்டார் நிறுவனத்தில் விளையாட்டு மற்றும் நேரடி அனுபவங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் சஞ்ஜோக் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி.யின் வரலாற்றில் 7-வது தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையை சஞ்ஜோக் குப்தா பெற்றுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனத்தில் பெற்ற அனுபவமும், விளையாட்டு துறையில் அவருடைய ஆளுமையும், உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒரு புதிய அதிகாரத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்துகிறது.

மேலும் ஐசிசியின் புதிய தலைவராக கடந்த வருடம் ஜெய்ஷா நியமிக்கப்பட்ட நிலையில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற 5-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது ஐசிசி நிர்வாகப் பொறுப்பில் மேலும் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார் கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.