இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டுமே துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி தன்னுடைய தொடக்கத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இது பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் ஆடும் ஆட்டம் என்பதால் இப்போதே ரசிகர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தானது என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில்,”ஐசிசி தொடர்கள் என்று வரும்போது இந்தியா ஒரு வலுவான அணி. அவர்கள் எப்போதும் நாக் அவுட் சுற்றை நெருங்கி விடுவார்கள். அவர்கள் தொடர் முழுவதும் ஆபத்தான அணியாகவே தான் இருப்பார்கள். அதேபோல நியூசிலாந்து அணியும் இருக்கும் என்று நம்புகிறேன். எட்டு அணிகள் பங்கேற்கும் இது மிகவும் சிறந்த தொடர்.  நானும் என்னுடைய கெரியரில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனவே நியூசிலாந்து இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.