
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ஆல்வின். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஜி ஆசாரி பள்ளத்தில் உள்ள வங்கியில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விட்டு ஈத்தாமொழிக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
பின்பு சுஜி பஸ்ஸில் இருந்து இறங்கி ஈத்தாமொழி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது இவரது அருகில் நின்றிருந்த இரண்டு பெண்கள் சுஜியின் பையை நைசாக திறந்து அதில் இருந்து 70 ஆயிரம் பணத்தை திருடினார்கள்.
இதனை கவனித்த சுஜி கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் இரண்டு பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வெள்ளச்சி(43), மற்றும் ஜோதி(35) என்பது தெரிய வந்தது. பின்பு இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து சுஜியிடம் ஒப்படைத்தனர்.மேலும் இருவரின் மீது வேறு ஏதும் குற்ற வழக்குகள் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.