ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

இந்த நிலையில் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, ரேசர்வானியில் இசேர்ந்த பாரமுல்லா நோக்கி சென்ற வாகனம் ஒரு ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.

இதில் பஷீர்கானின் மனைவி நர்கீஸ் பேகம் என்பவர் உயிரிழந்தார். ஹபீஸா என்ற பெண் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனக் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக வடக்கு காஷ்மீரின் உரி, குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.