உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ட்ரோனிகா நகரப் பகுதியில், 12 வயது சிறுவன் சாஹில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஹில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையில்லாத ரஹ்மத் கட்டூன் என்பவரால் தத்தெடுக்கப்பட்டவர். ரஹ்மத், தௌலத் நகர் காலனியில் வசித்து வரும் நிலையில், தனது வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வந்தவர். கடந்த 2021ம் ஆண்டு அவரது கணவர் உயிரிழந்த பின்னர், இவர் தனியாக குழந்தையை வளர்த்து வருகிறார். கடந்த மே 14 ஆம் தேதி மாலை, சாஹில் அவரது வீட்டில் இறந்த கிடந்தான். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், ரஹ்மத் கட்டூன் காணாமல் போனதாக தெரிய வந்தது. உடனடியாக சாஹிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விசாரணையில், சாஹில் ரஹ்மதியின் சொந்த மகன் அல்ல என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் சாஹிலின் உண்மையான பெற்றோரை, பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இருந்து அழைத்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சாஹில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இந்த அடிப்படையில், சாஹிலின் உண்மையான தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ரஹ்மத் கட்டூனைக் கைது செய்தனர். சம்பவத்திற்கு காரணமாக, சாஹில் தனது தத்தெடுத்த தாயின் கடையிலிருந்து பணம் எடுத்ததாக, ரஹ்மத் மீது சந்தேகம் வந்ததால் சிறுவனை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.