
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம்புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்த அய்யாதுரைக்கு, பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர்.
மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இளைய மகனான பரமசிவன் (32), தனது மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் கடந்த 6 ஆண்டுகளாக தனியாக தந்தையின் வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார்.
பரமசிவன் மிகவும் மோசமான குடிப்பழக்கத்துடன் இருப்பவர். “என் வாழ்க்கை கெட்டதற்குக் காரணம் நீ தான்” என தாயிடம் அடிக்கடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, போதையில் வீட்டிற்கு வந்த பரமசிவன், மேலும் மது வாங்க பணம் கேட்டு தாய் பூபதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தந்தை அய்யாதுரை, சூழலை சமாளிக்க கிராம பெரியவர்களை அழைக்க வெளியே சென்றுள்ளார். சில நிமிடங்களில் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, பூபதி தூக்கில் தொங்கும் நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து வந்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காட்டில் பதுங்கியிருந்த பரமசிவன் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், “பணம் தர மறுத்ததால் தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்தேன். அதனால் கீழே விழுந்து இறந்துவிட்டார். பயந்துபோய், அது தற்கொலை போல இருக்க தூக்கில் தொங்க விட்டேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பரமசிவனை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.