உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், பன்வர்கோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் ஆதித்யா யாதவ் மீது கடுமையான புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்துக்குப் பிறகு, அவருடைய கணவர் மற்றும் மாமியார் புல்லட் மோட்டார் பைக் வாங்குவதற்காக ரூ. 1.5 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளனர். அதை தர முடியவில்லை என்பதற்காக, அந்தப் பெண்ணை அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஆதித்யா, தனது மனைவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தவறாகப் பகிர்ந்து அவமானப்படுத்தியுள்ளார். இது குறித்து அந்தப் பெண் பன்வர்கோல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் நேரடியாக காஜிபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில், மே 24 அன்று போலீசார் ஆதித்யா யாதவ் உட்பட 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண், நீதிக்காக தொடர்ந்து போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். 8மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.