
நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா(36). இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கீதாவின் அலறல் சுத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் கீதா மயங்கி கிடந்தார். ஜெகதீசனுக்கும் ரத்த காயங்கள் இருந்தது. நள்ளிரவு கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கீதா வெளியே சென்ற போது மர்ம நபர்கள் அரிவாளால் கீதாவை வெட்டினர். தடுக்க முயன்ற என்னையும் தாக்கியதாக ஜெகதீசன் கூறியுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கீதாவை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கீதாவின் தாய் தனலட்சுமி தனது மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்தி விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் இருந்தும் பேசாமல் காலம் கழித்து வந்தனர்.
நள்ளிரவு நேரம் தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ஜெகதீசன் கத்தியால் கீதாவை குத்தி கொலை செய்துவிட்டு, தன்னையும் கத்தியால் குத்தி மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனால் ஜெகதீசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.