
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் சுவரொட்டி மூலம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த அமித் சென் என்ற நபர், தனது மனைவியின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டியை கையில் பிடித்தபடி கலெக்டரிடம் நேரில் முறையிட்டார். “என் மனைவிக்கு நான்கு ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். தற்போது ராகுல் பாத்தம் என்ற காதலனுடன் லிவ்-இன் உறவில் இருக்கிறாள். என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என சுவரொட்டியில் எழுதி, தனது வலியை வெளிப்படுத்தினார்.

அமித் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதோடு, தனது மூத்த மகன் ஹர்ஷை அவளும், அவளுடைய காதலனும் சேர்ந்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இளைய மகனுடன் அவள் தற்போது காதலனுடன் வசிக்கிறாள் என்றும் கூறியுள்ளார். அவளுக்கு எதிராக புகார் அளித்தபோதும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், வேலைக்குச் செல்லும்போது, மனைவி தன்னிடம் மாதந்தோறும் பணம் வசூலித்து, மதுபானம் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குவாலியர் கலெக்டர் , “இது கணவன்-மனைவிக்கிடையிலான தகராறு. இருவருக்கும் குடும்ப ஆலோசனை வழங்கப்படும். பின்னர் விசாரணை செய்து சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நீதியளிக்க உறுதி அளிக்கிறோம்” என தெரிவித்தார்.
மீரட்டில் நடந்த சௌரப் டிரம் கொலை வழக்குக்குப் பிறகு, நாடு முழுவதும் மனைவியால் துன்புறுத்தப்படுகிறோம் எனக் கணவர்கள் புகார் அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதில் ஒருவராக அமித் செனும் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.