கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வரும் 96 வயதான பழனிச்சாமி என்பவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரு மகன்களும், சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் தனியாக வசிக்கிறார். பழனிச்சாமி தனது சொந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். ஜெயக்குமார் அவருடைய வீட்டிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் சரஸ்வதி தனி குடும்பமாக வசிக்கிறார்.

சமீபத்தில், பழனிச்சாமியின் 2.25 செண்ட் நிலத்தை ஜெயக்குமார் தங்களுக்கு எழுதி தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகவும், உணவு மற்றும் உடல்நல பராமரிப்பில் கவனக்குறைவாக நடந்து கொண்டு சித்திரவதை செய்ததாகவும் தெரிகிறது.

இதனால் சரஸ்வதி தனது தந்தையை தற்காலிகமாக தனது இல்லத்திற்கு அழைத்து சென்று பராமரித்து வந்தார். ஆனால் மீண்டும் தனது தந்தையை அவரது வீட்டிற்கே திருப்பி அனுப்பி விட்டார்..

இந்த இடைவெளியில், ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் கீர்த்தனா, பழனிச்சாமியின் நிலத்தை மோசடி மூலம் தங்கள் பெயருக்கு மாற்றி எழுதி கொண்டது தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த பழனிச்சாமியின் இளைய மகன் வேல்முருகன், தனது தந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் நிலத்தை மீட்டு தருமாறு கோரியும், மோசடி செய்தவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழனிச்சாமி மனு கொடுத்துள்ளார்.