
திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும், 6 பவுன் தங்க நகையும் வைத்திருந்தார்.
அதனை அதே பேருந்தில் பயணித்த மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். கையில் வைத்திருந்த பையை காணாததால் அதிர்ச்சியடைந்த பத்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து பேருந்தில் சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது பேருந்தில் பயணித்த பீனன்(35)- நந்தினி(35) ஆகிய இருவரையும் போலீசார் சோதனை செய்த போது பத்மாவிடமிருந்து பணம் மற்றும் நகையை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகையை போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.