
சென்னையில் உள்ள நந்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் நிலையில் சமீபத்தில் ஒரு புத்தக கண்காட்சி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீராரும் கடலுடுத்த என்ற தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒன்று பாடப்பட்டது.
தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத வேறொரு தமிழ்த்தாய் பாடல் அதில் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தற்போது பபாசி விளக்கம் அளித்துள்ளது. அதாவது புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் முதல்வரையும் முதல்வர் ஸ்டாலினையும் சீமான் ஒருமையில் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அதன் பிறகு நிகழ்ச்சியில் புதுவை தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது ஏற்க முடியாத ஒன்று எனவும் தமிழக அரசின் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது எனவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பேசியதே சர்ச்சையாக மாற வேண்டும் என்பதற்காகத்தான். ஒருவேளை என்னுடைய பேச்சு மட்டும் சர்ச்சையாக மாறாவிட்டால் நான் பேசி என்ன பயன் என்று கூறினார். மேலும் ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறியது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறியதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டை வெளியேறிவிடலாம் என்று கூறினார்.