தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தன்னுடைய உயிருக்கும் சீமான், கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் நான்கு அரசியல் கொலைகள் அரங்கேரி உள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக ஜான்பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.