வாணியம்பாடி அருகே உள்ள மிட்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (24) மற்றும் வெண்ணிலா (22) ஆகியோர் காதலித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கூலி வேலை செய்து வந்த மதன்குமார், சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்திருந்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வெண்ணிலா, கடந்த மார்ச் 29ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வெண்ணிலா உயிரிழந்த தகவல், கட்டட வேலைக்காக ஒசூரில் இருந்த மதன்குமாருக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெரிதும் மனவேதனை அடைந்துள்ளார்.

அன்றைய தினம் மாலை, மதன்குமார் ஒசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் விஷம் வாங்கி குடித்துள்ளார். பின்னர், வீட்டுக்குச் செல்லும் பேருந்தில் ஏறியதுடன், பாதியில் அவரதுஉடல்நிலை மோசமாகியது. உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றினர். ஆனால் தீவிர சிகிச்சைக்கும் பலனளிக்காத நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து ஒசூர் போலீசார் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.