அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக வரும் தகவல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை. அவருடைய படங்கள் இல்லாததால் தான் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நான் தெளிந்த மனதுடன் இருக்கிறேன். அதிமுக கட்சி எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான் என்று கூறினார்.

முன்னதாக அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவு செய்ததற்காக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் அந்த விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைக்காமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால் தான் விழாவினை நிராகரித்ததாக கூறினார்.

இதனால் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை வெடித்ததாக கூறப்பட்ட நிலையில் விவசாயிகள் அந்த விழாவை ஏற்பாடு செய்தனர் என்றும் அதிமுகவுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது எனவும் அந்த விழாவில் அரசியல் வேண்டாம் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை தவிர்த்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்தார். இதன் காரணமாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த நிலையில்தான் அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் கட்சி எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.