
புதுச்சேரி மாவட்டம் கொசப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம்(34). இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். விக்ரம் த.வெ.க. கட்சியில் பிரமுகராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விக்ரம் பல இடங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி மினிலாரி ஒன்று வாங்கியிருந்தார்.
ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கியதால் அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வட்டி பணமும் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி விக்ரம் வீட்டிற்கு சென்று அவர் பணத்தை தருமாறு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் விக்ரம் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விக்ரம் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விக்ரம் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கும் முன்பாக விக்ரம் தன் கைப்பட ஒரு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு எழுதியிருந்தார்.
அந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் விக்ரம் எழுதியதாவது, நான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி ஒரு வேன் வாங்கியிருந்தேன். அதனை சரியாக செலுத்த முடியவில்லை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியாமல் கந்துவட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தைக் கேட்டு என்னை சித்திரவதை செய்து வந்தனர். எனவே எனக்கு அதிகமான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். மேலும் என்னோட கடைசி ஆசை இதுதான் என ஒரு சில ஆசைகளை எழுதி இருந்தார்.
அதில் எனக்கு கடன் கொடுத்தவர்கள் போல மற்றவர்களுக்கும் 10 முதல் 15 சதவீதம் வட்டிக்கு கொடுத்துவிட்டு அவர்களை சித்திரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் ஆட்சிக்காலங்களில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அனைவரும் பயப்பட வேண்டும். என்னுடைய மகள் மிகவும் நன்றாக படிப்பார்.
எனவே எனது மகள் மற்றும் மனைவியின் வாழ்வாதாரத்திற்கு பண உதவி செய்து என்னுடைய பிள்ளையை நன்றாக படிக்க வையுங்க ப்ளீஸ் அண்ணா. உங்களை நம்பி தான் நான் என்னோட உயிரை விடுறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் இறந்த பிறகு என்னுடைய உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு அதற்காக பணத்தை என்னுடைய மனைவியிடம் கொடுத்து என்னுடைய குடும்ப செலவிற்கு பணம் உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
இது குறித்து அரசாங்கமும் கந்துவட்டி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னுடைய சாவுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்த கடிதத்தினை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.