நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், கடந்த ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கியிருந்தனர். இவர்கள் இருவரும் SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 19-க்குள் பூமிக்கு திரும்பவிருக்கிறார்கள். ஆனால், இவர்களின் நீண்டகால விண்வெளி பயணத்திற்கான சம்பளம் பற்றிய விவாதம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. GS-15 நிலை பெடரல் அரசு ஊழியர்களாக இருந்தால், இவர்களின் ஆண்டு சம்பளம் $125,133 முதல் $162,672 (அதாவது ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை) இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் காடி கோல்மேன் அளித்த தகவலின்படி, விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டாலும் கூடுதல் சம்பளம் வழங்கப்படாது. அவர் “அரசாங்க ஊழியர்களைப் போலவே, அவர்கள் ஒரு உத்தியோகப்பூர்வ பயணத்தில் இருப்பதாகவே கணிக்கப்படுவார்கள்.  அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கண்டிப்பாக வழங்கப்படாது. ஆனால் NASA உணவு, போக்குவரத்து மற்றும் வசிப்பிட செலவுகளை ஏற்கும்” என தெரிவித்துள்ளார். ஆனால், சில சிறப்பு செலவுகளுக்காக ஒரு நாளைக்கு $4 (சுமார் ரூ.347) வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் 287 நாட்கள் விண்வெளியில் இருந்ததால், அவர்களுக்கு கூடுதல் தொகையாக $1,148 (சுமார் ரூ.1 லட்சம்) கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது.