
இந்தியாவின் பல்வேறு தொழிலாளர் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ எனும் வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் சேவைகள் தொடரப்பட்டன.
இதற்கிடையில், பத்தனம்திட்டா-கொல்லம் இடையே இயக்கப்பட்ட ஒரு பேருந்து டிரைவர் ஹெல்மெட் அணிந்தபடி பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
வீடியோவில் காணப்படும் டிரைவர் சிவு தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த கன்டக்டர் இந்த வீடியோவில், “வேலைநிறுத்தத்தின் போது தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக டிரைவர் ஹெல்மெட் அணிந்து கொண்டிருப்பதாக” தெரிவித்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து, கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் முன்னதாக, “வேலைநிறுத்தம் குறித்து தொழிலாளர் சங்கங்களிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. எனவே KSRTC சேவைகள் வழக்கம்போல நடைபெறும்” என தெரிவித்திருந்தார். ஆனால் தொழிலாளர் சங்கங்கள் இதனை மறுத்து, “அனைத்து KSRTC ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்” என உறுதிபடுத்தினர்.
இந்நிலையில், வேலைநிறுத்த நாளான இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் அனுமதியின்றி விடுப்பு எடுத்தால் அது ‘Dies Non’ எனப் பூரண வேலைநிறுத்தமாக கருதப்படும் என்றும், ஊதியமும், பணிக்கால நலன்களும் வழங்கப்படாது என்றும் கேரள மாநில பொதுநல ஆணையத்துறை உத்தரவிட்டுள்ளது. தவிர, மருத்துவ அவசரங்கள், பரீட்சை பணிகள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகள் தவிர்ந்த வேறு எவ்வித விடுப்பும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக, மத்திய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் விவசாயிகள், கிராமப்புறத் தொழிலாளர்கள் கொண்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வங்கி, அஞ்சல், போக்குவரத்து மற்றும் மின்சார சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.