
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி நடித்துள்ள ‘மிஸஸ் & மிஸ்டர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகியாகவும் வனிதா நடித்துள்ளார். அவரின் வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் 15 நாட்கள் மற்றும் சென்னையில் 15 நாட்கள் நடத்தப்பட்டது. எந்த ஓய்வும் இல்லாமல், தொடர்ந்து வேலை செய்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விழாவில் பேசும் வாய்ப்பு பெற்ற நடிகை ஷகீலா, வனிதாவை நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி என புகழ்ந்தார்.
“வனிதா அக்கா என்று அழைத்து நெருக்கமாக நடந்து கொள்வார். கோபம் வந்தால், அதிகமாக குரலை உயர்த்தி பேசுவார். பாங்காக்கில் 15 நாட்கள் ஓய்வு இல்லாமல் உழைத்தார். எனக்கு குடும்பம் இல்லை என்று நிறைய முறை அழுதிருக்கிறேன்.
ஆனால் வனிதாவால் ஒரு பெரிய குடும்பம் கிடைத்ததாகவே உணர்கிறேன்” என உருக்கமாக கூறினார். மேலும், பாங்காக்கில் சுற்றுலா செல்ல 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கலைஞர்களை அன்புடன் நடத்தியதாகவும் கூறினார்.
இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஷகீலா தெரிவித்தார்.
இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கும் நன்றி தெரிவித்த ஷகீலா, “படப்பிடிப்பு முடிந்த பிறகும் வனிதா இப்படத்துக்காக தூங்காமலும் சாப்பிடாமலும் உழைத்தார்.
இது எல்லாம் அவருடைய உறுதி மற்றும் தன்மையைக் காட்டுகிறது. ‘நாங்கள் உரிமைகள் கேட்பதில்லை… எடுத்துக்கொள்வோம்’ என்கிற வனிதாவின் வார்த்தைகள் உண்மையிலேயே மிக அர்த்தமுள்ளவை. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.