
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த சாதனையால், டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்களில் ஒருவராகும் இவர், அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கிய வைபவ், தொடக்கத்தில் அமைதியாக இருந்தாலும், பின் தொடர்ந்த அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை மிரள வைத்தது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடுத்ததும் சிக்ஸர் அடிப்பது எனக்கு சாதாரண விஷயம்தான். இந்திய அண்டர்-19 அணிக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இதை செய்துள்ளேன். முதல் 10 பந்துகளில் அழுத்தம் கொள்வதில்லை. என் ரேடாரில் பந்து வந்தவுடன் அதை சிக்ஸராக்கி விடுகிறேன்,” என தெரிவித்தார்.
பிரபல சர்வதேச பவுலரை எதிர்த்து ஆடியதாக இருந்தாலும், அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் தனது ஆட்டத்தை நிதானமாக ஆடியதாக கூறிய வைபவ், “ஐபிஎல் மேடையைப் பற்றி பெரிதாக யோசிக்கவே இல்லை. என் ஆட்டத்தை நம்பியிருந்தேன். அதையே வெளிப்படுத்தினேன்,” என்றார்.
தன் குடும்பப் சூழலை தெளிவாக பகிர்ந்த வைபவ், “என் தாய் தினமும் எனக்காக உணவு தயாரிக்கிறார். என் தந்தை எனக்காகவே வேலை விட்டு விட்டார். என் பெரிய அண்ணன் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்கிறார். வீட்டு நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. இருந்தாலும் என் பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர்,” என கூறினார்.
“கடின உழைப்பை மட்டுமே நம்புகிறேன். கடவுள் உழைக்கும் மக்களைத் துணைவனாக இருப்பார். நான் வெற்றி பெறுவதற்கான காரணம் என் பெற்றோர்களே. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. அதை நிறைவேற்ற கடினமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார். மேலும் குடும்ப கஷ்டத்திலும் வைபவ் கடுமையாக உழைத்து பெரிய உயரத்தை அடைய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பது பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.