வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில், கோடீஸ்வரி  திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து கதறி அழுத லட்சுமி, மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தகவலறிந்த குடியாத்தம் துணை டிஎஸ்பி ராமச்சந்திரன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தி, கோடீஸ்வரியின் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து போலீசார் கைப்பற்றிய 3 பக்கக் கடிதத்தில், கோடீஸ்வரி, சென்னையில் வேலை செய்த போது கோவையை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்ததாகவும், தற்போது அவர் தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.