தர்மபுரி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய மகளும், பிறந்து 4 மாதமே ஆன மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜன் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுந்தரியின் உறவினர்கள் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தரியின் கணவர் ராஜன், மாமியார் சின்ன பிள்ளை, மாமனார் நடராஜன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.