திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணிமாறன் நேற்று தன்னுடைய காதல் மனைவியுடன் தஞ்சம் புகுந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் கடந்த 24 வருடங்களாக சமூக சேவை செய்து வரும் நிலையில் பல மாவட்ட விருதுகள் மற்றும் தேசிய விருதுகளை சமூக சேவை செய்ததற்காக பெற்றுள்ளேன்.

நானும் பூர்ணிமா என்ற பெண்ணும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தோம். தற்போது ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்தோம். அதோடு பதிவு துறையிலும் முறையாக திருமணத்தை பதிவு செய்துள்ளோம். இந்நிலையில் என் மனைவியின் குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே எங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிடடுள்ளார். மேலும் போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதாக உறுதி கொடுத்துள்ளனர்.