திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில், நாய் கடித்ததற்கான தடுப்பூசி அல்லது சிகிச்சையை அவர் பெற்றிருக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களால் ஏற்படும் உயிர் அச்சுறுத்தலுக்கு அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தெருநாய் கடிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய தடுப்பூசி மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், அற்புதராஜின் குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.