சத்தீஸ்கர் மாநிலத்தின் இளம் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் (33) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் செப்டிக் டேங்கில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தில் காணாமல் போன நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கழிவறை தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பிஜப்பூர் பகுதியில் நடந்த ஒரு அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து அவர் செய்தி வெளியிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

அந்த கட்டுமானத்தின் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவரிடம் இந்த ஊழல் தொடர்பாக அவர் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அதன் பிறகு தான் அவருக்கு சொந்தமான இடத்தில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் நேற்று ஹைதராபாத்தில் வைத்து ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முகேஷ் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் அவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதாவது ஒரு கனமான பொருளால் முகேஷை தாக்கிய நிலையில், அவருடைய தலை, மார்பு மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தது. அதோடு அவருடைய இதயத்தை வெளியே பிடுங்கி எடுத்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரித்தேஷ், தினேஷ் சந்திரகர் மற்றும் மகேந்திர ராம்தேகா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.