வங்காளதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு அங்கு சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்து அமைப்பினர் நடத்திய ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காளதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்று நினைத்து இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் காசியாபாத் கவி நகர் பகுதியில் உள்ள குல்தார் ரயில்வே நிலையம் அருகே நடந்தது. அங்கு சுமார் 100 முதல் 150 குடும்பங்கள் வரை குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களை வங்கதேச முஸ்லீம்கள்  என்று நினைத்து பெண்கள் சிறுமிகள் உட்பட அனைவரையும் கொடூரமாக தாக்கியதோடு அவர்களின் உடமைகளையும் தீ வைத்து எரித்தனர். இதனை தடுக்க அந்த  பகுதியில் உள்ளவர்கள் முயற்சித்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு தான் காவல்துறையினர் அங்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு இந்து ரக்ஷாதல் அமைப்பின் தலைவர் பிங்கி சௌத்ரி முழுமையாக பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைமாக உள்ள சிலரை தேடி வருகிறார்கள்.