இந்திய IFS அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள 11 விநாடி வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்துள்ளது. இவ்வீடியோவில், ஒருவர் அச்சமின்றி, கைகள் மூலம் உலகின் மிகவும் விஷமுள்ள மற்றும் பிரமாண்டமான நாகமாகக் கருதப்படும் கிங் கோப்ரா பாம்பை தைரியமாக பிடித்து கையாளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

வீடியோவில், அந்த மனிதர்நேரடியாக பாம்பின் உடலை பிடிக்கிறார். பாம்பின் நீளமும் அகலமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து IFS அதிகாரி கஸ்வான் தனது பதிவில், “உண்மையில் கிங் கோப்ராவின் அளவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பினீர்களா? இது இந்தியாவின் எந்த பகுதியில் கிடைக்கும் தெரியுமா? இதைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்”, என விழிப்புணர்வு குறிப்புடன் பதிவிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பலரும் பாம்பின் கோலத்தை புகழ்ந்தும், பயத்தில் பதறியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “இதன் அளவு பார்க்க ஒரு அனகோண்டாவை போலவே இருக்கிறது!” என குறிப்பிட்டுள்ளாராம். மேலும் ஒருவர், “அச்சமான அழகு!” என்றும், இன்னொருவர், “நான் ஒரு கிங் கோப்ராவை பார்த்த உடனே… வேறு வழியில் ஓடிப்போய்விடுவேன்!” என தங்கள் உணர்வுகளை பகிர்ந்துள்ளனர்.

இயற்கையின் மகத்துவத்தை, அதிலும் பாம்பின் மதிக்கத்தக்க தோற்றத்தையும் உணர்த்தும் இந்த வீடியோவில் ஒருவர், “வாவ்… இது எவ்வளவு பெரியது!” எனவும், மற்றொருவர், “Majestic என்பதற்கு பொருள் தேடினால், இந்த உயிரினத்தையே சொல்ல வேண்டும்”, என கவிதைபோல் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த வீடியோ, காட்டு உயிரினங்களை மதிப்பதற்கும் பாதுகாப்புடன் அணுகுவதற்கும் ஒரு வலியுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.