‘பிளாஸ்டிக் அல்லாத ஜூலை’ என்ற விழிப்புணர்வு மாதம் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கடுமையாக ஊடுருவியுள்ளதைக் கூறும் புதிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை, மனித ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மூளை, கருமுட்டை, நஞ்சுக்கொடி, தசை போன்ற முக்கிய உடல் உறுப்புகளிலும் அது புகுந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் இந்த நுண்துகள்கள், நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவுகள், பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் வழியாக நம் உடலுக்குள் நுழைகின்றன.

அந்த நுண்துகள்கள், ரத்தத்தின் ஊடாக முக்கிய உறுப்புகளுக்குள் புகுந்து, நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், கருவுறுதலில் சிக்கல்கள் போன்ற பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு தீர்வு ஒன்றே – பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது! மக்கள் பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் தவிர்த்து துணிப் பை, கண்ணாடி அல்லது ஸ்டீல் பாட்டில்கள், உணவுகளைச் சேமிக்க மரம் அல்லது கண்ணாடி டப்பாக்கள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுப் பொருள்களை வைத்துக் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பரிமாறும் பழக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

‘ஜூலை மாதம் பிளாஸ்டிக் இல்லாமல் கடைப்பிடிப்போம்’ என்ற நோக்கத்துடன் மக்கள் நடமாடும்போது, எதிர்காலத்தில் இந்த பயங்கர நச்சுத் தாக்கத்திலிருந்து நம்மையும் நம் சந்ததியையும் காக்க முடியும்.

இது ஒரு சிறிய முயற்சி போன்று தோன்றினாலும், உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான செயலாக இருக்கிறது. வாழ்விலும் உடலிலும் பிளாஸ்டிக்கிற்கு இடமில்லாமல் கடைப்பிடிப்பதே இன்றைய அவசியம்.