ஓடிசா மாநிலம் போட் மாவட்டம் புறுநாபாணி ரயில் நிலையம் அருகே டலுபாலி பகுதியில், மூன்று சிறுவர்கள் நடத்திய ஒரு அதிர்ச்சி மிக்க “ரீல் வீடியோ” தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். அதாவது ஒரு சிறுவன் ரயில்வே தண்டவாளத்தில் தலையை தூக்காமல் நேராக படுத்தபடி, மேலாக வேகமாக ஒரு ரயில் ஓடிக்கொண்டே செல்லும் நேரத்தில் மற்றொரு சிறுவன் அந்தக் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் மூன்றாவது சிறுவன் அந்த ஆபத்தான செயலை இயக்குநராக வழிநடத்தியுள்ளான். ரயிலின் சைரன் ஒலிக்க, அதே நேரத்தில் ரயில் சிறுவனின் மேல் ஓடி சென்ற நிலையில் அவர் காயமின்றி உயிர் தப்பித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பாலாங்கீர் ரயில்வே போலீசாரும், பவுன்சுனி காவல்துறையும் இணைந்து மூன்று சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுபோன்று “லைக்குகள்” மற்றும் “பிரபலமாகும் விருப்பம்” என்ற பேதைச் செயல்களுக்காக ஆபத்தான முறையில் விளையாடுவது பெரிய சிக்கலாகி வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்து, “இதை போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்கள் மீண்டும் நிகழ்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தவிர்த்து, ஒவ்வொருவரும் பொறுப்புடன் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.