கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கிருஷ்ண பிரசாத். இவர் 15 வருடங்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மாநிலத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தபோது 21 வயது இஸ்ரேலிய பெண் ஒருவரை சந்தித்து காதலித்துள்ளார்.

பின்னர் அவரை தனது சொந்த ஊரான கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு 15 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இஸ்ரேலிய பெண்ணான சத்வாவிடம் மீண்டும் அவரது நாட்டிற்கே சென்று விடுமாறு கூறியுள்ளார்.

தனக்கு வயதாகி விட்டதால் தான் இறந்த பிறகு சத்வாவை யாரேனும் தாக்கக்கூடும் என்று பயந்த அந்த முதியவர் அவரை இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சத்வா மறுத்துள்ளார். இதனால் கிருஷ்ணபிரசாத் சத்வாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனிடையே அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் கதவை திறந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணபிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு இஸ்ரேலிய பெண் சத்வாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.