
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 9 வயது பாலஸ்தீன சிறுவனின் வாழ்க்கை வெறும் ஒரு புகைப்படமாக உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு கைகளையும் இழந்த மஹ்மூத் அஜ்ஜோர் என்ற சிறுவனின் படத்தை “World Press Photo 2025” விருதுக்கு தேர்வு செய்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மார்ச்சில் காஸாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் மஹ்மூத் பயந்து ஓடிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு கை முழுவதும் துண்டிக்கப்பட்டு, மற்ற கை பலத்த சேதம் அடைந்தது.
இந்த மனமுருக்கும் தருணத்தை புகைப்பட கலைஞர் சமர் அபு எலுஃப், நியூயார்க் டைம்ஸுக்காக படம் பிடித்திருந்தார். கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் இவர், பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகிற்கு சொல்லிக்கொடுக்கும் புகைப்படக் கலைஞராக பெயர் பெற்றவர்.
மஹ்மூத்தின் புகைப்படத்தில், இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கை இல்லாத நிலையில் அவன் முகத்தில் அசைவற்ற துக்கம் மட்டும் பிரதிபலிக்கிறது.
இதைப்பற்றி சமர் கூறும் வார்த்தைகள் மிகவும் கண்களை கலங்கச் செய்கின்றன. “மஹ்மூத் தனது கைகளை இழந்த உண்மையை உணர்ந்த அந்த தருணத்தில், அவன் தாயிடம் சொன்ன முதல் வார்த்தை – ‘நான் உன்னை இனி எப்படி கட்டிப்பிடிக்க முடியும் அம்மா?’ என்பதுதான்,” என்று உணர்ச்சி மிகுந்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலால் கடந்த 2023 முதல் 51,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மஹ்மூத்தின் கதை மற்றும் புகைப்படம், உலக நாடுகளின் கவனத்தை காஸா மக்களின் நிலைமைக்குத் திருப்பியுள்ளது.