திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் பேருந்தில் ஓட்டுனராக பணி புரியும்போது மகள் வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் கூத்தூர் பகுதிக்கு அவர் இளம்பெண்ணை அழைத்து வந்தார். இந்த தகவல் இளம் பெண்ணின் உறவினருக்கு தெரிய வரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் துவரங்குறிச்சி அரசு பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சுல்தானிடமிருந்து இளம்பெண்ணை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவலின் பேரில் துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.