
தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஒதுக்கீட்டை விரைந்து சப்ளை செய்யுமாறு நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு வழங்க மாதம் சராசரியாக 32 கோடி கிலோ அரிசி தேவைப்படுகிறது. இது இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான பொருட்கள் வினியோகம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்னும் கடைகளுக்கு அரிசி முழுவதுமாக சப்ளை செய்யப்படவில்லை. எனவே அனைத்து கடைகளுக்கும் அரிசி ஒதுக்கீட்டை விரைந்து சப்ளை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.