ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களும் நடுவானிலேயே வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிந்தி, சியோல் கோட் நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய  போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நிலைமை மோசமாக உள்ளது. இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகின்றன. ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.