திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும் கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் ஆன்லைன் வர்த்தகத்திலும் பொருள் வாங்கி விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. ஆன்லைன் டிரேடிங் மூலம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லோகநாதன் தனக்கு தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர், கிரெடிட் கார்டு மூலம் கடனை வாங்கி 15 லட்ச ரூபாய் பணத்தை திரும்பி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

லோகநாதன் அவ்வபோது தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். அப்போது வாணி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் கூறியதாக தெரிகிறது. நேற்று லோகநாதன் தனது மகள் சாஸ்விகாவிடம் வெளியே சென்று வருவோம் என கூறி புட்லூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு கடையில் சாப்பிட்டு விட்டு நீண்ட நேரமாக மகளுடன் ரயில் நிலையத்திலேயே அமர்ந்திருந்தார். இரவு 11 மணிக்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி விரைவு ரயில் வந்தது. உடனே லோகநாதன் தனது மகளுடன் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த வாணி கணவரையும் மகளையும் இழந்து கதறி துடித்த சம்பவம் காண்போரே கண் கலங்க வைத்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.