மதுரை மாநகரம் சோழை அழகுபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவலத்தை எதிர்கொண்டுவருகிறார்கள். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர், சில வாலிபர்களை கண்டித்தார்.

குறிப்பாக, போதையில் இருந்த ரவுடிகள் காவாளி, முத்து, பாலா மற்றும் சரவணன் ஆகிய நால்வரும் ஒருங்கிணைந்த கும்பலாக கஞ்சா விற்பனை செய்தனர். அவர்களை எச்சரித்த பாண்டி மற்றும் கார்த்திக் மீது அரிவாளுடன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  இதே சமயத்தில், “போதைப்பொருள் விற்பனையைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தீர்களா?” என பொதுமக்களையும் மிரட்டினர்.

தாக்குதலால் பலத்த காயமடைந்த தந்தை-மகன் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தின் முழு நிகழ்வும் அருகிலிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சம்பவம் மீதான விசாரணையை ஜெகேந்தபுரம் காவல் நிலையம் மேற்கொண்டு வருகின்றது. மேலும், கஞ்சா விற்பனை, போதைப்பொருள் பரவல், பொது மக்களின் பாதுகாப்பு எனப் பல்வேறு கோணங்களில் சட்ட ஒழுங்கு தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.