
உத்தரபிரதேசம் வாரணாசியில், திருமண வற்புறுத்தல் மற்றும் பணம் கோரப்பட்டதற்காக, 22 வயது MSc மாணவியான அல்கா பிந்த் என்பவரை அவரது காதலன் சஹாப் பிந்த் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, மிர்சாமுராத் பகுதியில் உள்ள ரூபாபூரில், விதான் பசேரா தாபாவில் உள்ள அறையில், அல்கா பிந்த் கழுத்து அறுக்கப்பட்டு, போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லூரிக்குச் சென்றதாக கூறிய அல்கா, மாலை வரை வீடு திரும்பாததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் காணாமல் போனதாக புகார் அளித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், சிசிடிவி காட்சிகளும், மொபைல் அழைப்புப் பதிவுகளும் வைத்து விசாரணை நடத்தியதில், அல்காவின் காதலன் சஹாப் பிந்த் மீது சந்தேகம் வலுப்பெற்றது.
சஹாப் பிந்த் பதோஹி பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது தப்பிக்க முயன்ற அவர், போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். விசாரணையில், அல்கா திருமணத்திற்கும், தொடர்ந்து பணம் வேண்டும் என்றும் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் கோபத்தில் அவரை கொலை செய்ததாக சஹாப் வாக்குமூலம் அளித்தார். மேலும், தாபா ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்யச் சென்றபோது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, சோகம் அடைந்த அல்காவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இதற்கான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்,” என X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.