ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை, காதலியுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், குடும்பத்தினர் அவரது கையிலிருந்து மொபைலைப் பறித்தனர். இதனால் மனமுடைந்த அந்த பெண், கோபத்தில் விஷம் குடித்தார். உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், இரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அதன்பின் குடும்பத்தினர் உடலை பிரேத பரிசோதனை செய்யாமலே வீட்டிற்கு கொண்டு வந்து இரண்டு மணி நேரத்தில் தகனம் செய்தனர்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை காதலியின் தற்கொலை செய்தியை அறிந்த இளைஞர், தனது மொபைல் போனுடன் வெளியேறினார். பதர்பூர் கிராமம் அருகே உள்ள மரப்பகுதிக்கு சென்று, தனது குடும்பத்தினரிடம், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். பின்னர் மரத்தில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிவில் லைன்ஸ் காவல் நிலைய போலீசார் அந்த இடத்துக்கு வந்து, உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இருவரும் தாய்வழி உறவினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளதாக இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் சிங் கூறியுள்ளார். இந்நிலையில், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாதது சமூகத்தில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.